தொடர்ந்து உயிரிழப்பு அதிகரிப்பால் மக்கள் அதிர்ச்சி: கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 115 பேர் சாவு - பாதித்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை எட்டியது
கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 115 பேர் கொரானாவுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 3,693 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 422 பேருக்கு (உயிரிழந்தவர்கள் உள்பட) இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் கொரோனா பாதித்தவர்களில் நேற்று முன்தினம் வரை 1,038 பேர் தங்களது உயிரை பறி கொடுத்துள்ளனர். பெங்களூரு உள்பட 7 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், கடந்த 3 நாட்களாக கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், அதே நேரத்தில் சாவு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரிசோதனை அதிகரிக்கவும், கொரோனா நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில கொரோனாவுக்கு 115 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3,693 பேருக்கு புதியதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) 50 ஆயிரத்து 384 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 3,693 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 77 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 20 ஆயிரத்து 557 பேர் மீண்டுள்ளனர். இதில், நேற்று மட்டும் 1,028 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாநிலம் முழுவதும் 33 ஆயிரத்து 205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெங்களூரு நகரில் 2,208 பேருக்கும், மைசூருவில் 93 பேருக்கும், கலபுரகியில் 89 பேருக்கும், தார்வாரில் 157 பேருக்கும், பல்லாரியில் 133 பேருக்கும், கொப்பலில் 30 பேருக்கும், தட்சிணகன்னடாவில் 39 பேருக்கும், பாகல்கோட்டையில் 29 பேருக்கும், உடுப்பியில் 80 பேருக்கும், உத்தரகன்னடாவில் 75 பேருக்கும், பெலகாவியில் 95 பேருக்கும், விஜயாப்புராவில் 118 பேருக்கும், துமகூருவில் 36 பேருக்கும், மண்டியாவில் 22 பேருக்கும், ராய்ச்சூரில் 33 பேருக்கும், பீதரில் 69 பேருக்கும், தாவணகெரேயில் 31 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 33 பேருக்கும், சிக்கபள்ளாப்பூரில் 31 பேருக்கும், கோலாரில் 51 பேருக்கும், சிவமொக்காவில் 10 பேருக்கும், குடகில் 13 பேருக்கும், சித்ரதுர்காவில் 24, சாம்ராஜ்நகரில் 10 பேருக்கும், ஹாசனில் 21 பேருக்கும், சிக்கமகளூருவில் 28 பேருக்கும், யாதகிரியில் 4 பேருக்கும், ராமநகரில் 14 பேருக்கும், ஹாவேரியில் 58 பேருக்கும், கதக்கில் 59 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 115 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். பெங்களூருவில் மட்டும் 75 பேரும், தார்வாரில் 8 பேரும், பெலகாவியில் 4 பேரும், பல்லாரி மற்றும் உடுப்பியில் தலா 3 பேரும், மைசூருவில் 7 பேரும், மண்டியா மற்றும் உத்தர கன்னடாவில் தலா 2 பேரும், பாகல்கோட்டை, குடகு, தட்சிண கன்னடா, விஜயாப்புரா, கதக், துமகூரு, ராய்ச்சூர், சிக்பள்ளாபூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி பலியாகி உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கர்நாடகத்தில் நேற்றுடன் ஒட்டு மொத்தமாக 55 ஆயிரத்து 115 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 1,153 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் மட்டும் 27 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல, பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் ஒட்டு மொத்தமாக 582 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருவதால் கர்நாடக மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story