வாணியம்பாடி அருகே, அம்மிக்கல்லால் தாக்கி மனைவி கொடூரக்கொலை - கள்ளக்காதலை கண்டித்ததால் வியாபாரி வெறிச்செயல்


வாணியம்பாடி அருகே, அம்மிக்கல்லால் தாக்கி மனைவி கொடூரக்கொலை - கள்ளக்காதலை கண்டித்ததால் வியாபாரி வெறிச்செயல்
x
தினத்தந்தி 18 July 2020 4:15 AM IST (Updated: 18 July 2020 5:39 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் அம்மிக்கல்லால் தாக்கி மனைவியை கொலை செய்த மாட்டு வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மேல்தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 65), மாட்டு வியாபாரி. அவருடைய மனைவி ஆரஞ்சு (60). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மணி கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த மனைவி, கணவனை கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த மணியை, மனைவி ஆரஞ்சு கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மணி அம்மிக்கல்லை தூக்கி மனைவி மீது போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் மணி சரணடைந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story