கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது: திரையரங்குகளை திறக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே, தற்போதைக்கு திரையரங்குகளை திறக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
செங்கோட்டை,
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள மணிமண்டபத்தில் இருக்கும் வாஞ்சிநாதன் உருவச்சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நெல்லை, தென்காசி ஆகிய இரு மாவட்டங்களும் தியாகிகள் நிறைந்த மாவட்டம் ஆகும். தியாகிகள் தினமான செங்கோட்டையில் அமைந்துள்ள வீரவாஞ்சிநாதன் உருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தரமான சிகிச்சை மூலம் கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர். இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் நோயின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, தற்போதைக்கு திரையரங்குகளை திறக்க வாய்ப்பு இல்லை. நோயின் தாக்கம் குறையும்பட்சத்தில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவிக்கும்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை வைத்தே எதிர்க்கட்சியினர் எப்படி பட்டவர்கள்? என தமிழக மக்களுக்கு தெரியவந்துள்ளது. இ-பாஸ் முறையில் எவ்வித முறைகேடுகளும் இல்லாத அளவுக்கு அரசு மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அரசுடன் கலந்து ஆலோசித்து மேலும் எளிய முறையில் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், செங்கோட்டை தாசில்தார் ரோசன்பேகம், மண்டல துணை தாசில்தார் தமிழ்செல்வி, துணை தாசில்தார் தெய்வசுந்தரி, வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் காளிச்செல்வி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு )கண்ணன், சுகாதார அலுவலர் வெங்கடேசன், செங்கோட்டை நகர அ.தி.மு.க செயலாளர் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில் செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Related Tags :
Next Story