பலத்த மழையால் அடுக்குமாடி கட்டிடம் இடிந்த விபத்தில் மேலும் 5 பேர் பலி


பலத்த மழையால் அடுக்குமாடி கட்டிடம் இடிந்த விபத்தில் மேலும் 5 பேர் பலி
x
தினத்தந்தி 17 July 2020 10:30 PM GMT (Updated: 18 July 2020 2:08 AM GMT)

மும்பையில் பலத்த மழையால் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

மும்பையில் தொடர்ந்து 3 நாட்களாக வெளுத்து வாங்கிய மழையால் நேற்று முன்தினம் மாலை போர்ட், மின்ட் ரோட்டில் உள்ள பானுசாலி என்ற 6 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அன்று நள்ளிரவு வரை 15 பேர் மீட்கப்பட்டனர். இதில் 4 ேபர் பலியானார்கள்.

மேலும் சிலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று கருதப்பட்டதால் நள்ளிரவை தாண்டியும் மீட்பு பணி விடிய விடிய நடந்தது. நேற்று காலை 2 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் மீட்கப்பட்டு ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதேபோல 17 வயது சிறுவனும், ஒரு பெண்ணும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அடுக்குமாடி கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் காசும் குப்தா (வயது45), ஜோத்சனா குப்தா (50), பத்மலால் குப்தா (50), கிரண் திரஜ் மிஸ்ரா (35), மணிபென் பரியா (62) சைலேஷ் பால்சந்திரா (17), பிரதிப் சவுரசியா (35), ரிகு சவுரசியா (25) மற்றும் கல்பேஷ் நாஜி தாரியா (32) என்பது தெரியவந்தது.

இதற்கிடையே 9 பேரின் உயிரை பறித்த கட்டிட விபத்துக்கான காரணம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கூறியதாவது:-

இந்த கட்டிடத்தை சீரமைக்க கடந்த ஆண்டு (2019) மகடாவுக்கு மாநகராட்சி அனுமதி அளித்தது. அதன் பின்னர் அந்த ஆபத்தான கட்டிடத்தில் வசிப்பவர்களை வெளியேற்றுவதும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதும் மகடாவின் பொறுப்பு ஆகும். அதன்படி மகடா அதிகாரிகள் அங்கு வசித்து வந்த 12 குடும்பத்தினரை காலி செய்தனர். ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக சீரமைப்பு பணி நிறுத்தப்பட்டதாக அவர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் காலி செய்யப்பட்டதில் 3 குடும்பத்தினர் மீண்டும் அந்த கட்டிடத்திற்கு வந்து குடியேறி உள்ளனர். இதனால் உயிர் பலி ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அதே நாளில் மலாடு மால்வாணி கேட்நம்பர்-5 பகுதியில் 3 மாடிகளை கொண்ட கடடிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்ததும், 13 பேர் காயத்துடன் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Next Story