மராட்டியத்தில், ஒரே நாளில் 8,308 பேருக்கு கொரோனா - 258 பேர் பலியான பரிதாபம்


மராட்டியத்தில், ஒரே நாளில் 8,308 பேருக்கு கொரோனா - 258 பேர் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 18 July 2020 4:15 AM IST (Updated: 18 July 2020 7:38 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 8,308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 258 பேர் உயிரிழந்தனர்.

மும்பை, 

மராட்டியத்தை ஆட்கொல்லி வைரஸ் தனது கொடூரப்பிடியால் இறுக்கி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

நேற்றுமுன்தினம் வரை மாநிலத்தில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில், நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 92 ஆயிரத்து 589 ஆக அதிகரித்து உள்ளது.

மாநிலத்தில் ெதாற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு நாளில் 8 ஆயிரத்தை கடப்பது என்பது இது 3-வது முறையாகும். இதற்கு முன் நேற்றுமுன்தினம் அதிகபட்சமாக 8 ஆயிரத்து 641 பேருக்கும், கடந்த 11-ந் தேதி 8,139 பேருக்கும் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டது.

நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த வைரஸ் நோய் 258 பேரின் உயிரை பறித்தது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 452 ஆக அதிகரித்து உள்ளது.

அதே நேரத்தில் தீவிர கொரோனா பரவலுக்கு மத்தியில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்றும் இந்த கொடூர நோயின் பிடியில் இருந்து 2 ஆயிரத்து 217 பேர் மீண்டனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரத்து 357 பேர் குணமடைந்து உள்ளனர்.

1 லட்சத்து 20 ஆயிரத்து 780 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் இதுவரை 14 லட்சத்து 84 ஆயிரத்து 630 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவல் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story