கோவில்பட்டியில், இ.எஸ்.ஐ. மருந்தகம், தனியார் வங்கிக்கு விடுமுறை - கொரோனா தொற்று பரவல் எதிரொலி


கோவில்பட்டியில், இ.எஸ்.ஐ. மருந்தகம், தனியார் வங்கிக்கு விடுமுறை - கொரோனா தொற்று பரவல் எதிரொலி
x
தினத்தந்தி 18 July 2020 4:00 AM IST (Updated: 18 July 2020 7:38 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் இ.எஸ்.ஐ. மருந்தகம், தனியார் வங்கிக்கு நேற்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் கல்லூரியில் கோவிட் கேர் சென்டர் என்ற சிகிச்சை மையம் ஏற்படுத்தி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கோவில்பட்டி நகர பகுதியில் நேற்று முன்தினம் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று கோவில்பட்டி நகர பகுதியில் 26 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில், கோவில்பட்டிஇ.எஸ்.ஐ. மருந்தகத்தில் பணியாற்றும் மருத்துவ பணியாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நகராட்சி பணியாளர்கள் மருந்தகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். அந்த மருந்தகம் மூடப்பட்டது.

இதே போல், தனியார் வங்கி ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த வங்கி மூடப்பட்டது. வங்கி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இ.எஸ்.ஐ. மருந்தகம், தனியார் வங்கிக்கு நேற்று முதல் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று வரை கொரோனா பாதிப்புக்கு 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 11 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதே போல், கோவிட் கேர் சென்டரில் 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே போல், கழுகுமலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி காசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த வங்கி மூடப்பட்டது. வங்கியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

வங்கிக்கு நேற்று முதல் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

Next Story