“தரிசு நிலங்களை மேம்படுத்தி விளைநிலங்களாக மாற்றும் திட்டம்” - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்


“தரிசு நிலங்களை மேம்படுத்தி விளைநிலங்களாக மாற்றும் திட்டம்” - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 July 2020 10:30 PM GMT (Updated: 18 July 2020 2:08 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தி விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை மேம்படுத்தி விளை நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி பகுதியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், தரிசு நிலங்களை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் எக்டர் நிலம் தரிசாக உள்ளது. 2020-21ம் ஆண்டில் தரிசாக உள்ள நிலங்களை பண்படுத்தி சிறுதானிய பயிர்கள் பயிரிடுவதற்கு 250 எக்டர் இலக்கும், பயறு வகை பயிர்கள் பயிரிட 250 எக்டர் இலக்கும், எண்ணெய் வித்து பயிர்கள் பயிரிடுவதற்கு 50 எக்டர் இலக்கும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி வட்டாரத்தில் தரிசாக உள்ள நிலங்களை பண்படுத்தி 40 எக்டர் பயறு வகை பயிர்கள் மற்றும் 10 எக்டர் சிறுதானிய பயிர்கள் பயிரிடப்படுகிறது. தற்போது கோரம்பள்ளம் - 2 வருவாய் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தரிசாக கிடந்த 4.5 ஏக்கர் தரிசு நிலம் தேர்வு செய்யப்பட்டு முட்புதர்கள் நீக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும் தூத்துக்குடி வட்டாரத்தில் கூட்டுடன்காடு, முடிவைத்தானேந்தல், தளவாய்புரம் மற்றும் பாறைக்குட்டம் கிராமங்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் மேம்படும். எனவே விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர்கள் தமிழ்மலர் (மத்திய அரசு திட்டம்), பழனிவேல் (மாநில அரசு திட்டம்), ஜெயசெல்வின் இன்பராஜ் (உழவர் பாதுகாப்பு திட்டம்) மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story