கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சை - ராணிப்பேட்டை கலெக்டர் நடவடிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க யோகா பயிற்சி, இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்க மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த விவரம் வருமாறு:-
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 19 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 1,910 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 857 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,858 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது. 1,915 பேர் தனிமைப்படுத்தி கணிகாணிக்கப்பட்டு வருகின்றனர்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு, தனியார் கல்லூரி வளாகங்களில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் தனிமைப்படுத்தப்படுவதால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனா தொற்று தாக்கம் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுவாசத்தை சீராக வைக்க, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சையுடன் யோகா பயிற்சி, இயற்கை மருத்துவச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அதன்படி வாலாஜா அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை டாக்டர் சசிரேகா தலைமையில் அரசு, தனியார் கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தபட்டவர்களுக்கு தியானம், யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி, நறுமண சிகிச்சை, நீராவி பிடித்தல், சூரியக்குளியல், அக்கு பிரசர், சிறப்பு சிகிச்சைகள், சிரமம் இல்லாமல் மூச்சு விடுவதற்கு தூங்கும் முறை சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
நேற்று ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியை தினமும் கடைப்பிடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, ஆரோக்கியமான வாழக்கையை வாழ முடியும். கொரோனா மட்டும் இல்லாமல் வேறு எந்த நோயும் நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று டாக்டர் சசிரேகா தெரிவித்தார்.
Related Tags :
Next Story