மாவட்டத்தில் 17 பெண்கள் உள்பட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 278 ஆக உயர்வு


மாவட்டத்தில் 17 பெண்கள் உள்பட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 278 ஆக உயர்வு
x
தினத்தந்தி 18 July 2020 7:49 AM GMT (Updated: 18 July 2020 7:49 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 17 பெண்கள் உள்பட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் நேற்று வரை 143 பேர் குணமாகி வீடு திரும்பினர். திருச்செங்கோடு லாரி டிரைவர் ஒருவர் இறந்த நிலையில், மீதமுள்ள 88 பேர் நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 17 பெண்கள் உள்பட மேலும் 46 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. அதன்படி குமாரபாளையத்தை சேர்ந்த 58 வயது பெண், பிள்ளாநல்லூர் அடுத்த குருக்கபுரத்தை சேர்ந்த 27 வயது பெண், திருச்செங்கோட்டை சேர்ந்த 20 வயது பெண், பரமத்திவேலூர் அடுத்த குப்பன்னம்பாளையத்தை சேர்ந்த 38 வயது பெண், சோழசிராமணியை சேர்ந்த 8 வயது சிறுமி உள்பட 5 பெண்கள், கொலக்காட்டுப்புதூரை சேர்ந்த 12 வயது சிறுமி உள்பட 2 பெண்கள், பாண்டமங்கலத்தை சேர்ந்த 21 வயது பெண், பள்ளிபாளையத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி மற்றும் குமாரபாளையத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி உள்பட 4 பெண்கள் என மொத்தம் 17 பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

மேலும் பொத்தனூரை சேர்ந்த 50 வயது ஆண், படைவீடை சேர்ந்த 37 வயது ஆண், திம்மநாயக்கப்பட்டியை சேர்ந்த 60 வயது ஆண் மற்றும் பாண்டமங்கலத்தை சேர்ந்த 25 வயது ஆணும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானது. அதேபோல் திருச்செங்கோட்டை சேர்ந்த 2 ஆண்கள், சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த 3 ஆண்கள், நாமக்கல் தாலுகாவை சேர்ந்த 70 வயது முதியவர் உள்பட 4 ஆண்கள், சோழசிராமணியை சேர்ந்த 11 வயது சிறுவன் உள்பட 3 ஆண்கள், கபிலர்மலை பகுதியை சேர்ந்த 7 இளைஞர்கள் மற்றும் குமாரபாளையத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் உள்பட 6 ஆண்கள் என மொத்தம் 29 ஆண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 பேரும் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது.

Next Story