திருவண்ணாமலையில், பள்ளி சத்துணவு மையத்தில் மாணவர்களுக்கு உணவு பொருட்கள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலையில் பள்ளி சத்துணவு மையத்தில் மாணவர்களுக்கு உணவு பொருட்களை கலெக்டர் கந்தசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையால் செயல்படுத்தப்படும் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் சத்துணவு மையங்களில் உணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு மே மாதத்திற்கான உலர் உணவு பொருட்களான அரிசி மற்றும் பருப்பு வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் அரிசி மற்றும் பருப்பு அடங்கிய பையை வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ராஜவேல், முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வன், மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜோதி, பவானி, திருவண்ணாமலை தாசில்தார் அமுல், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை, வேங்கிக்கால் ஊரட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்செல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த உலர் உணவு பொருட்களான அரிசி மற்றும் பருப்பு தொடக்கப்பள்ளி (1 முதல் 5-ம் வகுப்பு) மற்றும் நடுநிலைப்பள்ளி (6 முதல் 8-ம் வகுப்பு) மாணவர்களுக்கு பள்ளி வாரியாகவும், வகுப்பு வாரியாகவும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளி சத்துணவு மையத்தில் உணவு உண்ணும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 3 கிலோ 100 கிராம் அரிசியும், 1 கிலோ 200 கிராம் பருப்பும், நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ 650 கிராம் அரிசியும், 1 கிலோ 250 கிராம் பருப்பும் வழங்கப்படும்.
இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டதில் உள்ள தொடக்கப்பள்ளியில் பயிலும் 48 ஆயிரத்து 462 மாணவர்கள், 49 ஆயிரத்து 202 மாணவிகள் என மொத்தம் 97 ஆயிரத்து 664 பேர், நடுநிலைப்பள்ளியில் பயிலும் 33 ஆயிரத்து 533 மாணவர்கள், 33 ஆயிரத்து 851 மாணவிகள் என மொத்தம் 67 ஆயிரத்து 384 பேர் என மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரத்து 48 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story