கர்நாடகத்தில் வேகமாக பரவும் கொரோனா: முதல்-மந்திரி எடியூரப்பா மீது பா.ஜனதா மேலிடம் கடும் அதிருப்தி - கருத்து வேறுபாடுகளை மறந்து மந்திரிகள் பணியாற்ற உத்தரவு
கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவுவதால், முதல்-மந்திரி எடியூரப்பா மீது பா.ஜனதா மேலிடம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அத்துடன் மந்திரிகள் கருத்துவேறுபாடுகளை மறந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த மே மாதமே அதிகரித்துவிட்டது. மராட்டியம், டெல்லி, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவியது. அந்த நேரத்தில் கர்நாடகத்தில் வைரஸ் பாதிப்பு மிக குறைவாக இருந்தது. அதுவும் 1.30 கோடி மக்கள் வசிக்கும் பெங்களூருவில் தினசரி பாதிப்பு 10, 15 என்ற அளவில் தான் இருந்தது.
பிரதமர் மோடி, கொரோனா தடுப்பில் பெங்களூரு மற்ற பெருநகரங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக பாராட்டி பேசினார். முதல்-மந்திரி எடியூரப்பாவும், கொரோனா பரவுவதை தடுப்பதில் கர்நாடகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக பெருமையுடன் கூறி வந்தார். கர்நாடக அரசின் சீரிய நடவடிக்கைகளால் இது சாத்தியமானதாக எடியூரப்பாவை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரும் பாராட்டினர்.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் கர்நாடகத்தில் கொரோனா பரவல் என்பது சரவெடியை போல் வெடித்து சிதறியுள்ளது. திடீரென பாதிப்பு ஆயிரக்கணக்கில் உயர்ந்தது. அதுவும் தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகவேகமாக அதாவது தினசரி 2 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் மாதம் வரை கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் 12, 13-வது இடத்தில் இருந்து வந்த கர்நாடகம் தற்போது 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த அதிவேக கொரோனா பரவலை கண்டு முதல்-மந்திரி எடியூரப்பா அதிர்ச்சி அடைந்துள்ளார். கட்டுக்குள் இருந்த வைரஸ், எப்படி இந்த அளவுக்கு பரவியது என்று அவர் அதிகாரிகளை நோக்கி கேள்விக்கணைகளை எழுப்பி வருகிறார்.
இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கர்நாடகத்தில் விரைவில் கொரோனா பரவல் சமுதாய பரவலாக மாறக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஆகியோர் தொடர்பு கொண்டு, கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருவது குறித்து மிகுந்த கவலை தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், “கர்நாடகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா ஏன் திடீரென அதிகரித்தது, அதற்கு காரணம் என்ன, எங்கு தவறு செய்தீர்கள், கொரோனா தடுப்பில் நாட்டுக்கு முன்மாதிரியாக கர்நாடகம் திகழ்வதாக நாங்கள் பெருமையாக சொன்னோம். தற்போது. கர்நாடகம், வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படும் மாநிலமாக மாறிவிட்டது என்று தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள மந்திரிகள் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்றும் தகவல் வந்துள்ளது. அனைத்து மந்திரிகளும் தங்களின் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கொரோனா தடுப்பில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story