கொரோனா தடுப்பு பணி: கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் ஆலோசனை


கொரோனா தடுப்பு பணி: கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 19 July 2020 10:00 PM GMT (Updated: 20 July 2020 12:42 AM GMT)

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் நேற்று சுமார் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கியது. சாவு எண்ணிக்கை 28 ஆனது. கொரோனா தொற்று பரவிய காலத்தில் கவர்னர் கிரண்பெடி, கவர்னர் மாளிகையில் இருந்தபடியே காணொலி மற்றும் செல்போன் மூலமாக மருத்துவம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் தினசரி கூட்டம் நடத்தி தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வந்தார்.

ஆனால் கடந்த சில வாரங்களாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மார்க்கெட், பஜார்களுக்கு சென்று காரில் இருந்தபடியே கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். நேற்று முன்தினம் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

நேற்று மதியம் 3.30 மணிக்கு கோரிமேடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் பிரதிக்‌ஷா கோத்ரா, ராகுல் அல்வால் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டம் இரவு 7.30 மணி வரை 4 மணிநேரம் நடந்தது. இதில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கிரண்பெடி கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

கூட்டத்திற்கு பின்பு கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:-

அனைத்து அம்சங்களுடன் விரிவான தகவல் மையம் அமைப்பதற்காக போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கூட்டம் நடந்தது. சுகாதார மற்றும் காவல்துறை இடையே முழு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தினசரி காலை 9 மணிக்கு சுகாதாரத்துறை இயக்குனர் மின்னஞ்சல் மூலம் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவார். இந்த ஒருங்கிணைப்பு சூழ்நிலையால் வேகமான தரமான செயல்பாடுகளை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story