செல்வபுரத்தில் அதிக பாதிப்பு: கொரோனாவை கட்டுப்படுத்த 220 தெருக்களில் கிருமிநாசினி தெளிப்பு


செல்வபுரத்தில் அதிக பாதிப்பு: கொரோனாவை கட்டுப்படுத்த 220 தெருக்களில் கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 20 July 2020 9:13 AM IST (Updated: 20 July 2020 9:13 AM IST)
t-max-icont-min-icon

கோவை செல்வபுரத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த 220 தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.

கோவை,

கோவையில் கொரோனா அதிகம் பாதித்த பகுதி செல்வபுரம் ஆகும். இங்குள்ள நகைபட்டறைகளில் வேலை செய்தவர்களில் சிலருக்கு தொற்று பரவியதால் அங்கு ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது.

இந்த பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை துணையாளர் மதுராந்தகி, கோவை தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து உதவி ஆணையாளர் ரவி கூறியதாவது:-

220 தெருக்கள்

கோவை செல்வபுரத்தில் 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று தளர்வுகள் இல்லாத ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் வெளியே வரமாட்டார்கள். எனவே செல்வபுரத்தில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதுபோன்று வீட்டு கதவு, ஜன்னல்களை மூடி, வெளிப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

இதற்காக 11 டிராக்டர்கள் உள்பட 25 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதுதவிர பொன்னையராஜபுரம், தெலுங்குபாளையம், சொக்கம்புதூர், செட்டிவீதி, கல்லாமேடு, செல்வபுரம் ஹவுசிங் யூனிட் உள்பட பல்வேறு பகுதிகளில் 220 தெருக்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டன. மேலும் 10 வேன்கள் மூலம் கொரோனா குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story