கடலூரில் முழு ஊரடங்கை மீறி திறந்திருந்த மரக்கடைக்கு ‘சீல்’ கலெக்டர் நடவடிக்கை


கடலூரில் முழு ஊரடங்கை மீறி திறந்திருந்த மரக்கடைக்கு ‘சீல்’ கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 July 2020 11:25 AM IST (Updated: 20 July 2020 11:25 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கை மீறி கடலூர் பாதிரிக்குப்பத்தில் திறந்திருந்த மரக்கடைக்கு கலெக்டர் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

கடலூர்,

கொரோனா பரவுவதை தடுக்க நேற்று கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவை பொதுமக்கள், வணிகர்கள் சரியான முறையில் கடைபிடிக்கிறார்களா? என்று மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேற்று மாலை கடலூர் பாதிரிக்குப்பத்தில் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது சிலர் சாலையோரம் முக கவசம் அணியாமல் இருந்தனர். அவர்களை கண்டித்த கலெக்டர், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்ததோடு, சமூக இடைவெளியை பின்பற்ற உத்தரவிட்டார். மேலும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளையும் தேவையின்றி வெளியே சுற்றித்திரியக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.

மரக்கடைக்கு சீல் வைப்பு

தொடர்ந்து பாதிரிக்குப்பம் மெயின்ரோட்டில் ஒரு மரக்கடை திறந்து இருந்தது. இதை பார்த்த கலெக்டர், முழு ஊரடங்கை மீறி ஏன் கடையை திறந்து வைத்து உள்ளர்கள் என்று கடை உரிமையாளரை கடுமையாக எச்சரிக்கை செய்தார். அதையடுத்து அந்த கடைக்கு சீல் வைக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து தாசில்தார் செல்வக்குமார் முன்னிலையில் அந்த மரக்கடைக்கு கிராம நிர்வாக அலுவலர் வீரபாலன் மற்றும் அலுவலர்கள் சீல் வைத்தனர்.

எச்சரிக்கை

அதன்பிறகு திருவந்திபுரம், வெள்ளகேட், கோண்டூர் ஆகிய இடங்களில் ஆய்வு செய்த கலெக்டர் செம்மண்டலம் வழியாக அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார், ஆட்டோ வந்தது. அதை மறித்த கலெக்டர், அதில் இருந்தவர்களிடம் முழு ஊரடங்கை மீறி எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டு எச்சரிக்கை செய்தார். மேலும் ஆட்டோ, கார் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின் போது தாசில்தார் செல்வக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

Next Story