திருவள்ளூர் அருகே, சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - வாலிபர் உயிர் தப்பினார்
திருவள்ளூர் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் கமலேஷ் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனக்கு சொந்தமான காரை ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக பயன்படுத்தாமல் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார்.
இந்தநிலையில் அவர் நேற்று காலை காரை சுத்தம் செய்து, திருவாலங்காடு நோக்கி ஓட்டி சென்றார். நார்த்தாவாடா பகுதியில் வரும் போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தீப்பற்றியதால், நிலைகுலைந்து போன கமலேஷ் செய்வதறியாமல் திகைத்து போனார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் காரில் இருந்த கமலேசை கீழே இறக்கி, உடனடியாக தண்ணீர் ஊற்றி, காரில் எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக கமலேஷ் உயிர்தப்பினார். காரை நீண்ட நாட்களாக இயக்காததால் எந்திர கோளாறு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story