திருவோணம் அருகே, நடைபயிற்சி சென்ற நகைக்கடை அதிபர் காரில் கடத்தல் - தொழில் போட்டி காரணமா? போலீசார் விசாரணை


திருவோணம் அருகே, நடைபயிற்சி சென்ற நகைக்கடை அதிபர் காரில் கடத்தல் - தொழில் போட்டி காரணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 July 2020 3:45 AM IST (Updated: 22 July 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

திருவோணம் அருகே நடைபயிற்சி சென்ற நகைக்கடை அதிபர் காரில் கடத்தி செல்லப்பட்டார். தொழில் போட்டி காரணமாக கடத்தப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள ஊரணிபுரத்தை சேர்ந்தவர் சீமான்(வயது 48). இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், பாலசிவானி என்ற 7 வயது மகளும் உள்ளனர் ஊரணிபுரத்தில் நகைக்கடை வைத்துள்ள சீமான், தினந்தோறும் காலையில் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு நடைபயிற்சி செல்வது வழக்கம்.

வழக்கம்போல் நேற்று காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்ட சீமான், கல்லணைக்கால்வாய் கரையில் நடைபயிற்சி சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி சீமானின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது சீமானின் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தனர். ஆனால் அவரை பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சீமானின் அண்ணன் ராமச்சந்திரன் திருவோணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமித்ரா, திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், ராஜசேகர் மற்றும் சிறப்பு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் சீமான் நடைபயிற்சி சென்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை வைத்து தடயங்களை சேகரித்தனர். இதில் நடைபயிற்சி சென்ற சீமானை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது. தொழில் போட்டி காரணமாக சீமான்கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? அவரை கடத்தி சென்றவர்கள் யார்? கடத்தி எங்கு வைத்துள்ளனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், கடத்தப்பட்ட சீமானை கடத்தல் கும்பல் தங்க வைத்துள்ள இடத்தை போலீசார் கண்டறிந்து விட்டதாகவும், அவரை மீட்பதற்கான முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.

நடைபயிற்சி சென்ற நகைக்கடை அதிபர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story