மின்கட்டண குளறுபடிகளை கண்டித்து தஞ்சையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின்கட்டண குளறுபடிகளை கண்டித்து தஞ்சையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
மின்கட்டண குளறுபடிகளை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் அறிவாலயம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நீலமேகம் எம்.எல்.ஏ., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், பொதுக்குழு உறுப்பினர் முரசொலி, மகளிர் தொண்டரணியை சேர்ந்த கமலா ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணம் கணக்கெடுத்ததில் உள்ள குழப்பங்களை நீக்கி, பொதுமக்களுக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு ஊரடங்கு கால மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். குறிப்பாக முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தை குறைப்பதற்கு பதில் அந்த தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வேண்டும். அப்படி குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை எளிய மாதத்தவணையாக செலுத்த அனுமதி வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்தும், கோரிக்கை பதாகை, கருப்பு கொடிகளை ஏந்தியும் கலந்து கொண்டனர்.
இதேபோல் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. சீனிவாசபுரத்தில் உள்ள தனது வீட்டின்முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வல்லம் கடை வீதி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி தலைமை தாங்கினார். வல்லம் நகர செயலாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் மேற்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் மாணிக்கம் மற்றும் நகர தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story