திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 July 2020 4:30 AM IST (Updated: 22 July 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட தி.மு.க. முடிவு செய்து இருந்த நிலையில் போலீசார் அனுமதி அளிக்க மறுத்து தடை விதி்த்தனர்.

இதனையடுத்து போலீசாரின் தடையினை மீறி திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன், நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அமுதாசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலையிழந்துள்ள நிலையில் மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் திருவாரூர் புலிவலத்தில் ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான தேவா தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மன்னார்குடியில் நகர தி.மு.க. சார்பில் நகர அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. விஜயன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமாணிக்கம், நகர செயலாளர் கணேசன், மாநில வர்த்தக சங்க துணைத்தலைவர் ஞானசேகரன், முன்னாள் நகர செயலாளர் பூபாலன், மாநில மாணவரணி துணை செயலாளர் சோழராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பழனிமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளிலும் தி.முக.வினர் தங்களின் வீடுகளில் கருப்புக்கொடியை ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குடவாசல் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிராமன் தலைமை தாங்கினார். மூலங்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். குடவாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். எரவாஞ்சேரி கடைத்தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பிரமணியன் தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் சாமிநாதன், ஊராட்சி தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் சோமு, தி.மு.க. நிர்வாகிகள் கணேசன், ஹாஜாமைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். அம்மையப்பன் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணைச்செயலாளர் பரசுராமன் தலைமை தாங்கினார். குளிக்கரை கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். கண்கொடுத்தவணிதம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் கபிலன் தலைமை தாங்கினார். தேவர்கண்டநல்லூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ரவி தலைமை தாங்கினார்.

திருமக்கோட்டை கடைவீதியில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச்செயலாளர் கலைவாணிமோகன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் கோவிந்தராசு, முன்னாள் மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமக்கோட்டை அருகே உள்ள பைங்காநாடு கிராமத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஷோபாகணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் அருள்மொழி சுதாகரன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் ஊராட்சி செயலாளர் திருமுருகன், ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலத்தில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சித்தமல்லி சோமசுந்தரம் தலைமையில், அவரது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், பரப்பனாமேடு ஊராட்சி தலைவர் கைலாசம், ஒன்றிய துணைச்செயலாளர் தென்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்னிலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் வரத.கோ.ஆனந்த் அவர் வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் பூந்தோட்டத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன் தலைமையில் கொத்தவாசலில் அவரது வீட்டின் முன்பு தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். நன்னிலத்தில் நகர செயலாளர் பக்கிரிசாமி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி பாலம்,மேலக்கடைத்தெரு,ஏ.ஆர். சாலை, மின்வாரிய அலுவலகம் ஆகிய 4 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தி.மு.க.வினர் 20 பேர் மீது கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். பள்ளங்கோவில் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் கார்த்திக், பேரூர் பொறுப்பாளர் நவாஸ்கான், மாவட்ட பிரதிநிதி இப்ராஹிம், நகர துணைச்செயலாளர் சிவ.அய்யப்பன், இளைஞரணி நிர்வாகி தீன்முகமது, மாணவரணி நிர்வாகி ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் அனைத்து கிளையிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட பிரதிநிதி குன்னலூர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story