குடும்ப கஷ்டம் காரணமாக டீ விற்க சென்றபோது 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி


குடும்ப கஷ்டம் காரணமாக டீ விற்க சென்றபோது 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி
x
தினத்தந்தி 22 July 2020 6:13 AM IST (Updated: 22 July 2020 6:13 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காலத்தில் குடும்ப கஷ்டம் காரணமாக டீ விற்பனை செய்து வந்த 9-ம் வகுப்பு மாணவன், 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

பெரம்பூர்,

சென்னை மண்ணடி மூர்தெருவில் வசித்து வருபவர் சாகிர் ஹசன். கார் டிரைவர். இவருடைய மகன் ரியாஸ்(வயது 15). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் கார் சரிவர ஓட்டமுடியாமல் போனதால் போதிய வருமானம் இன்றி சாகிர்ஹசன் குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார். தற்போது பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்து வரும் அவருடைய மகன் ரியாஸ், குடும்ப கஷ்டம் காரணமாக தந்தைக்கு உதவியாக வீட்டில் டீ தயாரித்து கேன்களில் வைத்து கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தார்.

நேற்று ரியாஸ், மண்ணடி அரண்மனைகாயர் தெருவில் புதிதாக கட்டி வரும் 6 மாடி கட்டிடத்தில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் டீ விற்க அந்த கட்டிடத்தின் 5-வது மாடிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவன் ரியாஸ், 5-வது மாடியில் இருந்து நிலைதடுமாறி ‘லிப்டு’ அமைப்பதற்காக கட்டி இருந்த இடைவெளி வழியாக கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரியாஸ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த எஸ்பிளனேடு போலீசார், பலியான மாணவன் ரியாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கட்டிட உரிமையாளரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story