சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு 500 ஜோடி பறவைகள், 2 குரங்குகள் பார்சலில் வந்ததால் பரபரப்பு


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு 500 ஜோடி பறவைகள், 2 குரங்குகள் பார்சலில் வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 July 2020 6:21 AM IST (Updated: 22 July 2020 6:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு 500 ஜோடி பறவைகள், 2 குரங்குகள் பார்சலில் வந்ததால் பரபரப்பு 4 பேரிடம் வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பார்சல்கள் கொண்டு செல்வதற்காக சிறப்பு பார்சல் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹவுராவில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு பார்சல் ரெயில் நேற்றுமுன்தினம் வந்தது. ரெயில் நிலையத்துக்கு வரும் பார்சல்களை ரெயில்வே பாதுக்காப்புப்படையினர் சோதனையிடுவது வழக்கம்.

அதன்படி போலீசார் பார்சல்களை சோதனை செய்தபோது 500 ஜோடி பறவைகள், 2 குறில் வகை குரங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டு எடுத்துவரப்பட்டு இருந்தது. இதுகுறித்து யானைக்கவுனி போலீசாருக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து யானைக்கவுனி போலீசார் நடத்திய விசாரணையில், இந்த பறவைகள் மற்றும் குரங்குகள் சரக்கு வாகனம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்ல இருப்பது தெரியவந்தது. இதுபற்றி கிண்டி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். குரங்குகள் மற்றும் பறவைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த ஆசிப் (வயது 32), ரியாஷ் (33), சென்னையை சேர்ந்த பரத் (34) மற்றும் இவரது நண்பர் என 4 பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story