சென்னையை தொடர்ந்து கோவையிலும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
சென்னையை தொடர்ந்து கோவையிலும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கோவை,
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் கோவை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத், துணை ஆணையாளர் மதுராந்தகி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் கிருஷ்ணா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின், கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் காளிதாஸ், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் நிர்மலா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்னைக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே வேறு எந்த அரசு ஆஸ்பத்திரியிலும் இல்லாத லினியர் ஆக்சி மீட்டர் என்ற அதிநவீன கருவி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன், கேத்லேப் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மற்றும் நவீன சிகிச்சை வசதிகள் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
மருத்துவ வளர்ச்சியில் கோவை 2-வது தலைநகரமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 69 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் கடந்த 19-ந் தேதி வரை 2,183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 726 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 1,355 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 19 லட்சத்து 84 ஆயிரத்து 579 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 3,500 முதல் 4,000 பேர் வரை கொரோனா பரிசோதனைமேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது கோவை மாவட்டத்தில் 806 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 280 பேர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும், ஒருவர் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியிலும், 210 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 265 பேர் கொடிசியா மையத்திலும், அன்னூர் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்ட மையத்தில் 21 பேரும், பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 பேரும், என்.எம்.ஹோம் சிகிச்சை மையத்தில் 9 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொடர் சிகிச்சைக்கு அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா தொற்று சிகிச்சை மையங்கள் என பல்வேறு பகுதிகளில் 4 ஆயிரத்து 685 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கூடுதலாக 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டறிய எக்ஸ்-ரே மற்றும் சி.டி. ஸ்கேன் கருவிகள் அவசியமானது என்பதை கருத்தில் கொண்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு ரூ.1.70 கோடியில் புதிய சி.டி. ஸ்கேன் கருவி நிறுவப்பட்டு உள்ளது. மேலும் உயிர் காக்கும் உயர் தர மருந்துகள் ரெமிட்டெஸ்வியர் என்ற மருந்து ரூ. 42,500-க்கு தமிழ்நாடு மருந்துகள் கழகம் மூலம் கொள்முதல் செய்ய முதல்-அமைச்சர் உத்தரவின்படி 60 ஆயிரம் மருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலின்படியும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் நடைபெறுகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களிடம் இருந்து பெறப்படும் பிளாஸ்மாவை கொண்டு சிகிச்சை அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்திலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவத்தின் மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story