மின் கட்டண உயர்வை கண்டித்து குமரியில் 700 இடங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் - 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
மின் கட்டண உயர்வைக் கண்டித்து குமரி மாவட்டம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்.
தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், முந்தைய மாதத்துக்கு செலுத்திய பில் கட்டணத்தை குறைப்பதற்கு பதில் அந்த தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், அப்படி குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாதத் தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக்கோரியும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று தி.மு.க.வினர் அவரவர் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏந்தியும், கருப்புச்சட்டை அணிந்தும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள அவருடைய வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநகர செயலாளர் மகேஷ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில செயலாளர் தில்லைச்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சேக்தாவூது, நிர்வாகிகள் பிரசாத், தமிழ் அரசன், சுரேஷ், செல்வராஜ், மேரி கேத்ரின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கருப்புச் சட்டை அணிந்தும், தி.மு.க. கொடி மற்றும் கருப்புக் கொடிகளை கைகளில் ஏந்தியவாறும் கலந்து கொண்டனர். மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆத்திக்காட்டுவிளை சீயோன்புரத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆஸ்டின் எம்.எல்.ஏ. கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் ஊராட்சித் தலைவர் பேரின்ப விஜயகுமார், நிர்வாகிகள் ஜெயக்குமார், வாசமுத்து, பாலகிருஷ்ணன், ஞானவினோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருங்கலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
எட்டாமடை பகுதியில் மாவட்ட பொருளாளர் கேட்சன் தனது வீட்டின் முன்பு கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தடிக்காரன்கோணம் பஞ்சாயத்து தலைவர் பிராங்கிளின், அழகியபாண்டிபுரம் தி.மு.க. பேரூர் செயலாளர் ஜெயக்குமார், ஞானம் பஞ்சாயத்து தலைவர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தோவாளை பால் பண்ணை தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தி.மு.க. செயலாளர் கருணாநிதி, ஊராட்சி துணைத் தலைவர் தாணு, மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை செயலாளர் ராஜ பாபு, ஒன்றிய மகளிரணி செயலாளர் சுந்தரி, கிளை செயலாளர் பூதலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் முழுவதும் 50 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, பேராசிரியர் டி.சி.மகேஷ், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ், மாவட்ட பிரதிநிதி ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளைக்கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் அவரவர் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இவ்வாறு குமரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 700 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்ததாக மாவட்ட செயலாளர்கள் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story