நீடாமங்கலம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் மீது தாக்குதல்; 4 பேர் காயம் - சாலைமறியல்-போக்குவரத்து பாதிப்பு


நீடாமங்கலம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் மீது தாக்குதல்; 4 பேர் காயம் - சாலைமறியல்-போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 July 2020 4:15 AM IST (Updated: 23 July 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் மீது இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இரு கட்சியினரும் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள ஒளிமதி கிராமத்தை சேர்ந்தவர் ஜான் கென்னடி(வயது 40), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர், ஜனநாய கவாலிபர் சங்கத்தின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளராக உள்ளார். அதே ஊரை சேர்ந்தவர்கள் சுந்தரமூர்த்தி(50), விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர். இவரது மனைவி சித்ரா(45), மூர்த்தி(55), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒளிமதி கிளைச்செயலாளர்.

ஒளிமதி கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் வெளி மாவட்ட நெல் கொள்முதல் செய்யப்படுவதை கண்டித்து வருகிற 27-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர். இதற்கான நோட்டீசை அச்சகத்தில் இருந்து பெற்றுக்கொண்டு நேற்று முன்தினம் இரவு 4 பேரும் நீடாமங்கலத்தில் இருந்து தங்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

கற்கோயில் பாலம் அருகில் 4 பேரையும் ஒளிமதி கிராமத்தை சேர்ந்தவரும், நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளருமான நடேச.தமிழார்வன், அவரது மகன் வக்கீல் தமிழ் ஸ்டாலின் பாரதி மற்றும் சிலர் வழிமறித்து உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அப்போது ஜான்கென்னடி அவர்களிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த ராஜா என்பவர் வீட்டிற்குள் ஓடியுள்ளார். அவரை விடாமல் துரத்திச்சென்று தாக்கியதுடன் அந்த வீட்டில் இருந்த பொருட்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு இளஞ்செழியன், நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த ஜான்கென்னடி, மூர்த்தி, சுந்தரமூர்த்தி, சித்ரா ஆகிய 4 பேரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீடாமங்கலம் போலீசார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை தாக்கியதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன், வக்கீல் தமிழ் ஸ்டாலின் பாரதி, வீரபாண்டி, அன்புசெல்வம், தமிழ்ச்செல்வன், மாதவன், கண்ணதாசன், ராஜ்குமார் ஆகிய 8 பேர்மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நீடாமங்கலம் போலீசார் பொய்வழக்கு போடுவதாக கூறி ஒளிமதியில், நடேச.தமிழார்வன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் நீடாமங்கலம் -திருவாரூர் சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீடாமங்கலம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி முன்னிலையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டுமென கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அங்கு 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய ராஜ்குமார் என்பவரை நீடாமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

இந்த மோதல் சம்பவம் மற்றும் சாலைமறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் நேற்று முழுவதும் பரபரப்பு நிலவியது.

Next Story