மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெற தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது


மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெற தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது
x
தினத்தந்தி 23 July 2020 5:28 AM IST (Updated: 23 July 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டசபையில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

சட்டசபையில் மின் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி அரசினர் தீர்மானத்தை மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் கொண்டு வந்தார். இதே தீர்மானத்தை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.வும் கொடுத்திருந்தார். அவரது தீர்மானமும், அரசினர் தீர்மானமாக எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டசபையில் விவாதிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

அமைச்சர் கமலக்கண்ணன்:- புதுவையில் மின் துறையை தனியார் மயமாக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் மத்திய அரசிடம் இருந்து கடந்த மே மாதம் 20-ந் தேதி புதுச்சேரி அரசுக்கு வந்தது. அதன்பின் மீண்டும் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் வருகிற ஜனவரி 31-ந் தேதிக்குள் மின்துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தெரியாமல் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

தனியார்மயம் தொடர்பான அறிவிப்பு வந்த உடனேயே நமது முதல்-அமைச்சர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மின்துறையில் திறமையின்மை, ஊழல், மின் இணைப்பு என பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை சரி செய்ய வாய்ப்புகள் உள்ளது. மின்துறையானது தானே புயல், கஜா புயல், நிஷா புயல், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் விரைந்து செயல்பட்டு 24 மணி நேரத்தில் மின்சாரம் தந்துள்ளது. கடந்த 2017-2018-ம் ஆண்டுகளில் 6 சதவீத லாபத்தையும் அடைந்தது. மின்துறை வாரியமாக மாற்றப்படுவதை நாம் ஏற்கவில்லை. அப்படியிருக்க தனியார் மயத்தை எப்படி ஏற்க முடியும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் நமக்கு இடர்பாடு ஏற்படும் ரூ.1,100 கோடி சொத்தை தனியாருக்கு தாரை வார்க்க முடியாது. எனவே அதற்கு எதிர்ப்பாக தான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம்.

அன்பழகன் (அ.தி.மு.க):- மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை புதுச்சேரி மாநிலத்தின் மீது திணிப்பது வழக்கம். குறிப்பாக உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டம், நீட்தேர்வு என பல்வேறு திட்டங்கள் நம்மீது திணிக்கப்பட்டுள்ளன. இதனால் நம் மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பன தொடர்பான அறிவிப்புகளை தமிழக முதல்-அமைச்சர் தனது கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளார். டெல்லியில் மின்சார வினியோகம் தனியார் மூலம் சரிவர நடக்கவில்லை. புதுவையில் தற்போது மின்துறையை தனியார் மயமாக்க வேண்டிய அவசியமில்லை. தற்போது நாம் உபயோகிக்கும் மின் சாரத்துக்கு 4 விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தனியாரிடம் சென்றால் ஒரே விதமான கட்டணம் வசூலிக்கப்படும். அவர்கள் லாப நோக்குடன் தான் செயல்படுவார்கள். அதனால் நமது மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்ட முதல் கையெழுத்து இலவச மின்சாரம் ரத்து ஆனது தான். ஆனால் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. கொரோனா காலகட்டத்திலும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளர்கள். கடந்த 4 மாதமாக மின்கட்டணம் கணக்கிடப்படும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் செயலை கண்டிக்கிறோம். புதுவை அரசு கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி:- மின்துறை புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் அனுமதியின்றி அதனை தனியார் மயமாக்குவதை நாம் ஏற்க முடியாது. இதுதொடர்பாக கடந்த மே மாதம் 9-ந் தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்த உடனேயே நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதற்கு அடுத்த நாளே பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

நமது மாநிலத்தில் மின் துறையில் எந்த இழப்பும் இல்லை. அப்படி இருந்தாலும் ரூ.6 கோடி தான் இழப்பு ஏற்படுகிறது. மின்துறை மூலம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருகிறோம். வீடுகளுக்கும் இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்துறை தனியார்மயமானால் சலுகைகளை நம்மால் வழங்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கேட்காமல் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது.

புதுவையில் சட்டமன்றம் உள்ளது. இந்த சட்டமன்றத்தில் விவாதித்து தான் எந்த முடிவும் எடுக்க முடியும். புதுவை பட்ஜெட்டுக்கு 4 விதமான கருத்துரு மத்திய அரசு வழங்கியது. அதில் நாங்கள் 3 ஏற்றுக்கொண்டோம். ஆனால் மின்துறை தனியார்மயம் என்பதை ஏற்கவில்லை. அதையேற்று கொண்டால் ரூ.350 கோடி வருவதாக மத்திய அரசு கூறியது. மின்துறை தொடர்பான மத்திய அரசின் முடிவுகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

இதைத்தொடர்ந்து அப்போது சபையை நடத்திக்கொண்டிருந்த துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். அதைத்தொடர்ந்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சட்டசபையில் அவர் அறிவித்தார்.

Next Story