கொரோனா பரவலை தடுக்க வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை
கொரோனா பரவலை தடுக்க வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2,396 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,641 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 725 பேர் சிகிச்சையில் உள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக, மாவட்ட நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் தனிமனித சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நோய் பரவலை முற்றிலும் தடுக்க வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களை கொண்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு குழுவினர் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மாவட்டத்தில் 30 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாள்தோறும் 1,000 முதல் 1,200 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றனர்.
Related Tags :
Next Story