விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி - புதிதாக 187 பேருக்கு தொற்று


விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி - புதிதாக 187 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 23 July 2020 3:45 AM IST (Updated: 23 July 2020 9:39 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் புதிதாக 187 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2,396 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 29 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 1,641 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு முதியவர் இறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் 63 வயது முதியவர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதற்கிடையே நேற்று 400-க்கும் மேற்பட்டோரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் மேலும் 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் திண்டிவனம் வேளாண்மை துறை உதவி பொறியாளர், திண்டிவனம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர், 6 செவிலியர்கள், விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ்காரர், விக்கிரவாண்டி போலீஸ்காரர், கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர், குராம்பாளையம் அங்கன்வாடி மைய பொறுப்பாளர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர், விழுப்புரம் கூட்டுறவுத்துறை உதவியாளர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,501 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 2,435 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் 51 வயதுடைய ஆண். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உமிழ்நீரை பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் திருக்கோவிலூர் அருகே திருப்பாலபந்தல் பகுதியை சேர்ந்த 64 வயதுடைய முதியவர் ஒருவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். முன்னதாக அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதியானது.

இதற்கிடையே நேற்று சிலரின் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் தனியார் மருத்துவமனை டாக்டர் உள்பட 82 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2517 ஆக உயர்ந்துள்ளது.

Next Story