கோவையில், முதியவர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி - 178 பேருக்கு தொற்று உறுதி
கோவையில் முதியவர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். நேற்று 178 பேருக்கு தொற்று உறுதியானது.
கோவை,
கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்த 70 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர், திடீரென்று இறந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது.
அதே பகுதியை சேர்ந்த 46 வயது ஆண் காய்ச்சல் காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. அவர் நேற்று முன்தினம் இறந்தார்.
கோவை ஆவாரம்பாளையம் அம்பாள் நகரை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் கடந்த 20-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலையில் அவர் இறந்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோவையில் கடந்த 2 நாட்களில் 3 பேர் பலியானதால் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை சேர்ந்த 51 வயது ஆண் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் வெளி மாவட்டத்தில் இருந்து வந்ததால் கொரோனா அச்சம் காரணமாக அவரை அங்குள்ள டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே அவர் நேற்று முன்தினம் இறந்தார். வெளிமாவட்டம் என்பதால் அவருடைய உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படவில்லை. கோவையில் தகனம் செய்யப்பட்டது.
கோவை ராக்கிபாளையத்தில் உள்ள தனியார் நகை தயாரிப்பு தொழிற்சாலையில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் 4 பேருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றும் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 60 வயது முதியவர் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் நேற்று முன்தினம் ஒரு சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவனுடன் நேரடி தொடர்பில் இருந்த 36 வயது பெண், 35 வயது ஆண், 12, 10 வயது சிறுமிகள், கணபதி போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 65 வயது மூதாட்டி, கோவை கரும்புக்கடையை சேர்ந்த 32, 17 வயது சிறுவன், 13 வயது சிறுமிக்கும் கொரோனா உறுதியானது.
கோவை செல்வபுரத்தில் நேற்று மட்டும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. செல்வபுரம் கிளஸ்டர் பகுதியாக உள்ளதால் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை ரெயில் நிலையத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பணிபுரியும் பெண், கோவை கொண்டையம்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 வயது ஆண், 23 வயது பெண், 2 வயது பெண் குழந்தை, பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை, கோவைபுதூர் கோகுலம் காலனியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
பொள்ளாச்சி மெட்டுவாவில் 37, 26 வயது பெண், 24, 29 வயது ஆண், ஆச்சிபட்டியை சேர்ந்த 4 பேர், கோவை தீத்திபாளையத்தில் 5 பேர், பீளமேடு 4 பேர் என நேற்று ஒரே நாளில் 94 ஆண்கள் உள்பட 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,539 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 1,418 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கோவை ரெயில் நிலையம் பின்புறம் ரெயில் பெட்டிகளை பராமரிக்கும் மையம் உள்ளது. இங்கு பணியாற்றிய பெண் ஊழியரின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் ரெயில் பெட்டி பராமரிப்பு மையம் இன்றும், நாளையும் மூடப்படுகிறது.
Related Tags :
Next Story