ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கி 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் சாவு
ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கோழிப்பண்ணைக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. இதில் சுமார் 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் உயிரிழந்தன.
ஒட்டன்சத்திரம்,
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம், பொருளூர், தேவத்தூர், அப்பியம்பட்டி நால்ரோடு, பூசாரிபட்டி, பெருமாள்கோவில்வலசு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன் எதிரொலியாக, பெருமாள்கோவில்வலசு கிராமத்தில் உள்ள வேப்பமரத்து ஓடையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்த தண்ணீர், அவினாசிபாளையம்-ஒட்டன்சத்திரம் செல்லும் சாலைக்காக அமைக்கப்பட்டு வரும் புதிய பாலத்தின் வழியாக செல்ல முடியாததால், அருகில் இருந்த விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.
அதன்படி பெருமாள்கோவில்வலசு பகுதியில் உள்ள நந்தகோபால் என்பவரின் கோழிப்பண்ணைக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. இதனால் பண்ணையில் இருந்த சுமார் 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகளும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் பண்ணையில் இருந்த 15 மூட்டை கோழித்தீவனங்களும் சேதமடைந்தன.
இதேபோல் மற்றொரு விவசாயியான தர்மராஜ் என்பவரது வீட்டிற்குள்ளும் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. இதில் அங்கிருந்த 70 மூட்டை சிமெண்டு, கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் சேதமானது.
இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மழைநீரை எந்திரம் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சேத விவரங்களையும் அவர்கள் சேகரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story