யார், யாருக்கு இ-பாஸ் கிடைக்கும் - கலெக்டர் தகவல்
திருப்பூர் மாவட்டத்தில் யார், யாருக்கு இ-பாஸ் கிடைக்கும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குமார்நகர் முருகம்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவமுகாம் நேற்று காலை நடந்தது. இந்த மருத்துவ முகாமை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் வெளிமாவட்ட, வெளிமாநில பகுதிகளில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தவர்களின் விவரங்களை பெற்று அந்த பகுதிகளில் மருத்துவ முகாம்களை அதிகப்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
தொடர் காய்ச்சல், சளி, இருமல் போன்ற குறைபாடுகள் இருப்பவர்களை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கவும் அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுபோல் ஒவ்வொரு பகுதியிலும் காய்ச்சல் பாதிப்பை கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக கொரோனா பரவலை கண்டறிய முடியும். வெளியூரில் இருந்து அதிகம் பேர் எந்தெந்த பகுதிகளில் வந்துள்ளனர் என்ற விவரத்தை அறிந்து அந்த பகுதிகளில் மருத்துவ பரிசோதனை தீவிரப்படுத்தப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் விவரங்களை ஆய்வு செய்து பார்த்ததில் 93 சதவீதம் பேர் வெளிமாவட்டம், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தான். இதன்காரணமாக வெளிமாவட்டம், வெளிமாநிலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தவர்கள் உள்ள பகுதிகளை அடையாளப்படுத்தி அங்கு மருத்துவ பரிசோதனைகள் அதிகப்படுத்தும்போது நோய் பரவல் கட்டுப்படுத்தப்படும்.
24 மணி நேரத்துக்குள் கொரோனா பரிசோதனை முடிவுகளை அறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்கள் வீதியில் நடமாடும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
மருத்துவம், இறப்பு, திருமணம் போன்ற அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. இறப்பு, திருமணம் போன்ற நிகழ்வுக்கு நெருங்கிய குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்கப்படும். பிறந்தநாள் கொண்டாடுவதற்கு கூட இ-பாஸ் பெற விண்ணப்பிக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது திருப்பூர் வடக்கு தாசில்தார் பாபு, மாநகர் நல அதிகாரி பூபதி, உதவி ஆணையாளர் வாசுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story