இருப்புப்பாதையையொட்டி தடுப்புச்சுவர் எழுப்பும் பணி: பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் அதிகாரிகள் சமரசம்


இருப்புப்பாதையையொட்டி தடுப்புச்சுவர் எழுப்பும் பணி: பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் அதிகாரிகள் சமரசம்
x
தினத்தந்தி 23 July 2020 1:55 PM IST (Updated: 23 July 2020 1:55 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே இருப்புப்பாதையையொட்டி தடுப்புச்சுவர் எழுப்பும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் கிராமம் ஜெய்பீம்நகர் அருகே தென்றல் நகர் பகுதியில் ரெயில்வே இருப்புப்பாதை உள்ளது. ஜெய்பீம்நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாக ரெயில்வே இருப்புப்பாதையை கடந்து சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் ரெயில்வேத்துறையினர் தற்போது ரெயிலின் வேகத்தை அதிகரிக்க 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்குவதால் பொதுமக்கள் இருப்புப்பாதையை கடந்து செல்லும்போது, அந்த வழியில் எந்த நேரத்திலும் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கலாம் எனக் கருதி பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வழியின் குறுக்கே இருப்புப்பாதையையொட்டி சுவர் எழுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அந்தப் பணி நடக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் வந்தனர்.

அதிகாரிகள் சமரசம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து, ரெயில்வே அதிகாரிகளை சூழ்ந்து முற்றுகையிட்டு இருப்புப்பாதை அருகில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழியின் குறுக்கே சுவர் எழுப்பும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரெயில்வே அதிகாரிகளை கண்டித்தும் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில்வே அதிகாரி ஜவகர், திருப்பத்தூர் தாசில்தார் மோகன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். பொதுமக்கள் பயன்படுத்த மாற்றுப்பாதை ஏற்படுத்தி தரப்படும், என அதிகாரிகள் கூறியதன்பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story