கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் நடவடிக்கை மழலையர் வகுப்புகள் முதல் 12-ம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் மராட்டிய அரசு உத்தரவு


கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் நடவடிக்கை மழலையர் வகுப்புகள் முதல் 12-ம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் மராட்டிய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 24 July 2020 5:04 AM IST (Updated: 24 July 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் மழலையர் வகுப்புகள் முதல் 12-ம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் நடத்த மராட்டிய அரசு உத்தரவிட்டு உள்ளது.

மும்பை,

நாட்டிலேயே கொரோனாவால் மராட்டியம் தான் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொடிய வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜூலை 15-ந்தேதி முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கும் என்று மாநில அரசு அறிவித்தது. கொரோனா பரவல் குறைவாக உள்ள இடங்களில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு 3-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்த மராட்டிய அரசு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதில் மழலையர் மற்றும் 1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இந்தநிலையில், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மராட்டிய அரசு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.

இதுகுறித்து மாநில பள்ளிக்கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியதாவது:-

தற்போது, மழலையர் முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

இதன்படி மழலையர் மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினசரி 30 நிமிடங்கள் வகுப்புகளை நடத்தலாம். இதில் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோருடன் உரையாடுவார்கள்.

1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு 30 நிமிடங்களில் 2 வகுப்புகளை நடத்த வேண்டும். இதில் முதல் 15 நிமிடம் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோரிடம் பாடங்கள் தொடர்பாக உரையாடுவார்கள். இரண்டாவது 15 நிமிடம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பார்கள்.

3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் 45 நிமிடங்கள் இரண்டு வகுப்புகள் நடைபெறும்.

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு நாளும் 45 நிமிடங்களுக்கு 4 வகுப்புகள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story