கூடுவாஞ்சேரி அருகே கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கியவர் தூக்குப்போட்டு தற்கொலை


கூடுவாஞ்சேரி அருகே கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கியவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 July 2020 6:06 AM IST (Updated: 24 July 2020 6:06 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி அருகே கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகுருநாதன் (வயது 38). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சீனியர் டெக்னீசியனாக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் கிரெடிட் கார்டு மூலம் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார்.

இந்த கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் மனமுடைந்த அவர் சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்ய போவதாக கடிதம் எழுதி கூரியர் மூலம் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

கடிதம் கிடைத்தவுடன் உடனடியாக உறவினர்கள் நேற்று முன்தினம் காயரம்பேடு கிராமத்தில் உள்ள பாலகுருநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்தாழ்பாள் போடப்பட்டிருந்தது. உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாலகுருநாதன் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் பாலகுருநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story