திருவோணம் அருகே, நகைக்கடை அதிபரை கடத்திய 6 பேர் கைது - மேலும் 5 பேருக்கு வலைவீச்சு


திருவோணம் அருகே, நகைக்கடை அதிபரை கடத்திய 6 பேர் கைது - மேலும் 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 July 2020 3:45 AM IST (Updated: 24 July 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

திருவோணம் அருகே பணம் கேட்டு நகைக்கடை அதிபரை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

ஒரத்தநாடு, 

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள ஊரணிபுரத்தை சேர்ந்தவர் சீமான் (வயது48), இவர் அதே ஊரில் நகைக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று காலையில் நடைபயிற்சி சென்ற சீமானை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. இதுகுறித்து சீமானின் அண்ணன் ராமச்சந்திரன் திருவோணம் போலீசில் புகார் அளித்தார்.

இதன் பின்னர் கடத்தப்பட்ட அன்றைய தினம் மாலை சீமான் தனது செல்போனில் இருந்து அவரது உறவினர் ஒருவருக்கு பேசினார். அப்போது அவர் போலீசில் கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெறுமாறு கூறினார். சீமானிடம் இருந்து போனை வாங்கி பேசிய மற்றொரு நபர் செல்போன் அழைப்பினை கொண்டு எங்களை கண்டுபிடிக்க முயற்சிக்ககூடாது. நாங்கள் சொல்லும்படி கேட்க வேண்டும் என்று மிரட்டினர். சீமானை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி தர வேண்டும் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய் ஊரணிபுரத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சீமானை மீட்க அமைக்கப்பட்ட 5 தனிப்படை போலீசாரை தீவிரப்படுத்தினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் கடத்தல் கும்பல் சீமானை நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே ஒரு இடத்தில் காரிலிருந்து கீழே இறக்கி விட்டு விட்டு அங்கியிருந்து தப்பி சென்றனர். இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சீமானை மீட்டு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய் நேரடி மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் நகைக்கடை அதிபர் சீமானிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவரை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றதும், போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து அவரை விடுவித்துவிட்டு தப்பி சென்றும் தெரியவந்தது. மேலும் தற்போது போலீசார் தீவிரமாக தேடுவதால் உன்னை விடுவிக்கிறோம், பிறகு எங்களுக்கு நீ பணம் தருகிறேன் என்று பத்திரம் எழுதி தர வேண்டும் என மிரட்டி சீமானிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து சீமானை பணம் கேட்டு கடத்திய கும்பலை சேர்ந்த பட்டுக்கோட்டை கண்டியன்தெருவை சேர்ந்த அத்திவெட்டி ஆனந்த்(37), தஞ்சாவூர் மாதாக்கோட்டை சர்மிளா நகரை சேர்ந்த சின்னையன் (58), சின்னையனின் மகன் கதிரவன்(32), ஊரணிபுரம் பெரியார் நகரை சேர்ந்த வீடியோகிராபர் மதிவதணன்(58), பாப்பாநாட்டை அடுத்துள்ள தெற்குகோட்டையை சேர்ந்த மணி (எ) குணசேகர் (39), பிரகாஷ் (37) ஆகிய 6 பேரையும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றையும், கடத்தப்பட்ட சீமானிடமிருந்து கையெழுத்து வாங்கிய பத்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய பிரசாந்த், கார் டிரைவர் சுரேஷ், புதுவிடுதியில் வசிக்கும் கரம்பயத்தை சேர்ந்த சிவனேசன், திருவலஞ்சுலி சுப்பையா, நன்னிலம் சந்திரபோஷ் ஆகிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story