கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் கடைகள் திறப்பு
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் கடைகள் திறக்கப்பட்டன.
தேனி,
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. மற்ற கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளையும் திறக்க வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி, தேனி மாவட்டம் முழுவதும் நகை கடை, ஜவுளிக்கடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை உள்பட அனைத்து விதமான கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. தேனி பகவதியம்மன் கோவில் தெரு நகரில் முக்கிய கடை வீதியாக உள்ளது. இங்கு நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும் பகல் நேரத்தில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. கடை வீதி வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், மக்கள் பலரும் முக கவசம் அணியாமல் தொடர்ந்து வீதிகளில் உலா வந்தனர்.
எனவே, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அரசு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வியாபாரிகள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story