கோவை மாவட்டத்தில் புதிய உச்சம் ஒரே நாளில் 238 பேருக்கு கொரோனா - முதியவர்கள் உள்பட 5 பேர் பலி
கோவை மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. முதியவர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள்.
கோவை,
கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவை ராக்கிபாளையத்தில் உள்ள தங்க நகை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்த 14 தொழிலாளர்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று 8 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோவை கரும்புக்கடையில் ஏற்கனவே கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த 43 வயது பெண், 24 வயது ஆண், 25 வயது பெண், 50 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவை வெங்கடாசலபதி நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், ரத்தினபுரியை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கோவை துடியலூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்பு படை முகாமில் உள்ள 36 வயது வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த முகாமில் உள்ள மற்ற வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 43 மற்றும் 30 வயது ஆண் பணியாளர்கள், மேட்டுப்பாளையம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 8 வயது சிறுமி ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
ராமநாதபுரம், பீளமேடு, நஞ்சுண்டாபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 3 நர்சுகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் குனியமுத்தூர் பகுதியில் 9 பேர், போத்தனூர் 8 பேர், மதுக்கரை 8 பேர், கோவைப்புதூர் பகுதியில் 4 பேர், குறிச்சி பகுதியில் 6 பேர், குரும்ப பாளையத்தை சேர்ந்த 8 பேர், பீளமேடு 7 பேர், சென்னப்ப செட்டிப்புதூரில் 7 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று 238 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,777 ஆக உயர்ந்து உள்ளது.
கோவை மாவட்டத்தில் இதற்கு முன் ஒரேநாளில் 188 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின்னர் நேற்று ஒரேநாளில் 238 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் கோவையில் 721 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 198 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 1,270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டை சேர்ந்த 55 வயது பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 20-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்கிடையே நேற்று காலை 9 மணியளவில் அவர் திடீரென இறந்தார்.
கோவை காந்தி பார்க் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் கடந்த 19-ந் தேதி கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் வயது முதிர்வு காரணமாக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை. இதன் காரணமாக நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் கோவை தெலுங்கு பாளையம் புதூர் சக்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதைதொடர்ந்து அவர் கடந்த 20-ந் தேதி சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவர் இறந்தார்.
கோவை எம்.என்.ஜி. வீதியை சேர்ந்த 59 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 19-ந் தேதி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கோவையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 44- ஆக உயர்ந்து உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். டயாலிசிஸ் சிகிச்சை செய்வதற்காக கடந்த 21-ந் தேதி கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். வெளி மாவட்டத்தில் இருந்து வந்ததால் அங்குள்ள டாக்டர்கள் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் அவர் திடீரென இறந்தார். கொரோனாவுக்கு பலியானதால் அவருடைய உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லவில்லை. கோவையில் தகனம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story