குன்னூரில் போதுமான மழை இல்லை: ரேலியா அணையின் நீர்மட்டம் சரிந்தது


குன்னூரில் போதுமான மழை இல்லை: ரேலியா அணையின் நீர்மட்டம் சரிந்தது
x
தினத்தந்தி 24 July 2020 11:15 AM IST (Updated: 24 July 2020 11:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் போதுமான மழை இல்லாததால் ரேலியா அணையின் நீர்மட்டம் சரிந்தது.

குன்னூர்,

குன்னூர் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரமாக ரேலியா அணை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அப்போதைய குன்னூர் நகரின் மக்கள் தொகையை கணக்கிட்டு இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 43. 7 அடியாக உள்ளது.

ரேலியா அணை குன்னூரிலிருந்து சுமார் 10. கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பந்துமி என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காலத்தின் போது அணை நிரம்பி தண்ணீர் வெளியேறி செல்வது உண்டு. உபரியாக அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரை தடுப்பணை கட்டி சேமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இந்த கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது.

தற்போது தென்மேற்கு பருவ மழை காலமாக உள்ளது. ஊட்டி, கூடலூர் போன்ற இடங்களில் பலத்த மழை பெய்தாலும் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போதுமான மழை இல்லாமல் உள்ளது.குறிப்பாக ரேலியா அணை நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்ய வில்லை. கடந்த மாதத்தில் ரேலியா அணையின் நீர்மட்டம் 41 அடியாக இருந்தது.மழை தொடர்ந்து பெய்யுமானால் அணையின் நீர்மட்டம் 2.7 அடி உயர்ந்து நிரம்பி வழியும் என எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த எதிர்பார்ப்பு பொய்த்து போனது. தற்போது அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 27 அடியாக தற்போது நீர் மட்டம் உள்ளது. இதனால் குன்னூர் நகருக்கு சீரான முறையில் தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணிர் வினியோகம் செய்யப்படுகிறது. இனி வரும் நாட்களில் மழை பெய்யாமல் இருந்தால் அணையின் நீர் மட்டம் சரிந்து குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Next Story