சித்ரதுர்கா அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலி; 3 பேர் படுகாயம் - திருப்பதி சென்று திரும்பிய மராட்டியத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்


சித்ரதுர்கா அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலி; 3 பேர் படுகாயம் - திருப்பதி சென்று திரும்பிய மராட்டியத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்
x
தினத்தந்தி 25 July 2020 4:00 AM IST (Updated: 25 July 2020 12:02 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்கா அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலியானார்கள். மேலும் பெண்கள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மராட்டியத்தை சேர்ந்த இவர்கள் திருப்பதி சென்று திரும்பும் வழியில் இந்த சோகம் நடந்துள்ளது.

சிக்கமகளூரு,

சித்ரதுர்கா மாவட்டம் கியாதிக்கெரே கிராமம் வழியாக சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரின் முன்னால் லாரி ஒன்றும் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் பெண்கள் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த சித்ரதுர்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காயமடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல் பலியான 2 பேரின் உடல்களையும் போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில், பலியானவர்கள் மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த சந்தோஷ் கெய்க்வாட் (வயது 40), ஷாய் (18) என்பதும், காயமடைந்தவர்கள் ரேணுஸ்ரீ, திராட்சாயினி, கார் டிரைவர் கைலாஷ் என்பதும் தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றதும், அங்கிருந்து அவர்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பதி சென்றுவிட்டு திரும்பும் வழியில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story