வாசுதேவநல்லூர் அருகே தனிமைப்படுத்தும் மையத்தில் கொரோனா நோயாளி தற்கொலை


வாசுதேவநல்லூர் அருகே தனிமைப்படுத்தும் மையத்தில் கொரோனா நோயாளி தற்கொலை
x
தினத்தந்தி 25 July 2020 4:45 AM IST (Updated: 25 July 2020 12:46 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அருகே தனிமைப்படுத்தும் மையத்தில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாசுதேவநல்லூர்,

தென்காசி மாவட்டம் குருவிக்குளம் அருகே உள்ள ஆவுடையாள்புரம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் மாரிக்கனி (வயது 42). விவசாய கூலி தொழிலாளி.

இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு வாசுதேவநல்லூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் அங்குள்ள இரும்பு கதவில் மாரிக்கனி தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். இதை பார்த்து அங்கிருந்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக வாசுதேவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாரிக்கனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து மாரிக்கனியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரிக்கனி கொரோனா பாதிப்பு காரணமாக மனஅழுத்தத்தால் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாரிக்கனிக்கு பொன்னுத்தாய் (36) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தனிமைப்படுத்தும் மையத்தில் கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story