நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: நடிகை கங்கனா ரணாவத்துக்கு போலீஸ் சம்மன்


நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: நடிகை கங்கனா ரணாவத்துக்கு போலீஸ் சம்மன்
x
தினத்தந்தி 25 July 2020 3:32 AM IST (Updated: 25 July 2020 3:32 AM IST)
t-max-icont-min-icon

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தொடர்பாக பிரபல நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

மும்பை,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவரது தற்கொலைக்கான காரணத்தை கண்டறிவதற்காக போலீசார் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் நடிகர்கள் உள்பட 38 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்து உள்ளனர். இதில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்தி, சினிமா இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, பட தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா உள்ளிட்டோரும் அடங்குவர்.

சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து,பிரபல நடிகை கங்கனா ரணாவத் இந்தி திரையுலகை கடுமையாக சாடி இருந்தார். மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் மனநல ரீதியில் பலவீனமானவர் அல்ல என்றும், தகுதிவாய்ந்த அவரது படங்களும், அவரது நடிப்பும் எந்த விருதுகளாலும் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கருத்து தெரிவித்தார். இந்தநிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக கங்கனா ரணாவத்தின் வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர். தற்போது கங்கனா ரணாவத் மணாலியில் இருக்கிறார்.

இதன் காரணமாக போலீசார் அந்த சம்மனை தபால் மூலம் அவருக்கு அனுப்பி இருக்கிறார்கள். கடந்த 3-ந் தேதியே அவரை மும்பைக்கு வரவழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்ய திட்டமிட்டு இருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story