சட்டசபை கூட்டம் தள்ளிப்போய் இருந்தால் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன் நாராயணசாமி ஆவேசம்


சட்டசபை கூட்டம் தள்ளிப்போய் இருந்தால் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன் நாராயணசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 25 July 2020 5:41 AM IST (Updated: 25 July 2020 5:41 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை கூட்டத்தொடர் தள்ளிப்போய் இருந்தால் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் நேற்று காலை கவர்னர் கிரண்பெடி உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து எம்.எல்.ஏ.க்கள் மாலையில் பேசினார்கள். இந்த கூட்டம் இரவு 8 மணி வரை நடந்தது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

கவர்னர் உரையில் புதுவை அரசின் சாதனைகள் பட்டியல் இடம் பெற்றுள்ளது. கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் 75 சதவீதம் தான் நிதியை செலவிட விட்டார்கள். நாங்கள் நிதி பற்றாக்குறை இருந்தாலும் 93 சதவீத நிதியை செலவிட்டு உள்ளோம். மத்தியில் மாற்றுக்கட்சி அரசாங்கம் இருந்தாலும் பல துறைகளில் முதல் இடத்தை பிடித்துள்ளோம்.

எம்.எல்.ஏ.க்கள் சில குற்றச்சாட்டுகளைக் கூறி உள்ளனர். புதிய தொழிற்கொள்கை வந்த பிறகு தொழில் தொடங்க வருபவர்களுக்கு பிப்டிக் நிலத்தை கொடுக்க சிலர் முட்டுக்கட்டை போட்டனர். சுற்றுலா திட்டங்களை தடுத்து நிறுத்தினார்கள். பொதுத்துறை நிறுவனங்களான பாப்ஸ்கோ, பாசிக் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் போட ரூ.8 கோடியை தர விடாமல் தடுத்து விட்டார்கள்.

ரோடியர் மில்லுக்கு ரூ.24 கோடியும், சுதேசி பாரதி மில்லுக்கு ரூ.6 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. அதையும் தடுத்து நிறுத்தினார்கள். இருந்தபோதிலும் 100 சதவீத வளர்ச்சியை புதுவை மாநிலம் எட்டியுள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு இடையே பட்ஜெட்டை தயாரித்தோம். அதிலும் மக்கள் நலத் திட்டங்களை தடுத்து நிறுத்த முயற்சி நடந்தது. அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள். ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் போடவும் அவர்கள் மூலம் அரிசி வழங்கவும் பல கூட்டம் நடத்தினோம். ஆனால் அதையும் தடுத்து நிறுத்தினார்கள். நாம் நல்லது செய்தால் எப்போதும் நல்லதுதான் நடக்கும். நியாயம் எப்போதும் வெல்லும். நம்மை தடுத்தவர்கள் மருத்துவர்களிடம் சென்று மாட்டிக்கொண்டார்கள். இதனால் மன்னிப்பு கேட்கும் நிலை கூட ஏற்பட்டது.

சட்டசபை கூடுவதற்கு முந்தைய நாள் கூட சட்டசபையை தள்ளிவைக்க வேண்டும் என்றார்கள். சட்டசபைக்கு உரையாற்ற வருவதாக ஒப்புதல் கொடுத்து விட்டு வர முடியாது என்று கூறினார்கள். நியாயம் நம் பக்கம் இருந்ததால் சட்டசபையைக் கூட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தேன். அப்போது சட்டசபை கூடாமல் தள்ளிப்போய் இருந்தால் நான் எனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன். இந்த சட்ட சபைக்கு என்று ஒரு மாண்பு உள்ளது. அந்த மாண்பு காக்கப்படவேண்டும் யாருக்கும் கெடுதல் செய்யாமல் அவசரப்படாமல் உண்மையைப் பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story