தஞ்சை அருகே குடம், குடமாக கள் பறிமுதல் - மாத்திரையை கலந்து விற்பனை செய்த 3 பேர் கைது


தஞ்சை அருகே குடம், குடமாக கள் பறிமுதல் - மாத்திரையை கலந்து விற்பனை செய்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 July 2020 3:45 AM IST (Updated: 25 July 2020 7:35 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே குடம், குடமாக கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மாத்திரையை கலந்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பகுதிகளில் பல்வேறு இடங்களில் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தனிப்படை போலீசாருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம், ஏட்டுகள் மோகன், உமாசங்கர், இளையராஜா, சிவக்குமார், அழகுசுந்தரம், அருண் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மாரியம்மன்கோவில், கீழவஸ்தாசாவடி, நெடார், வயலூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வயலூரை அடுத்த ராஜேந்திரம்தோப்பு பகுதியில் கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்ற போது குடம், குடமாக கள் இறக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. விற்பனை செய்தது போக அங்கிருந்த 5 குடம் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதைக்காகவும், கள் நிறத்திற்காகவும் மாத்திரையை கலந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இது தொடர்பாக தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்த செவத்தியார் (வயது55), மாரியம்மன்கோவில் பகுதியை சேர்ந்த துரைராஜ் (55), நெடார் மெயின்ரோட்டை சேர்ந்த காமராஜ் (55) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 40 பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் தனிப்படை போலீசார் தஞ்சை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். தாலுகா போலீசார் வழக்குப்பதிவு கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story