திருவெண்ணெய்நல்லூர் அருகே, லாரி டிரைவர் அடித்துக் கொலை - மாமனார் உள்பட 2 பேர் கைது


திருவெண்ணெய்நல்லூர் அருகே, லாரி டிரைவர் அடித்துக் கொலை - மாமனார் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 July 2020 3:45 AM IST (Updated: 25 July 2020 8:55 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரி டிரைவரை அடித்துக் கொலை செய்த அவரது மாமனார் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரசூர், 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் செல்வமணி (வயது 35), லாரி டிரைவர். இவரும் மேல்தணியாலம்பட்டு கிராமத்தை சேர்ந்த சேட்டு என்கிற ராஜேந்திரன் மகள் ராஜலட்சுமி (30) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு செல்வமணி தனது மனைவியுடன் மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு முகிலன் (11) என்ற மகனும், பிரிதிக்‌ஷா (9), பிரியங்கா (7) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு செல்வமணி, தனது மாமனார் ராஜேந்திரனுக்கு (59) சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்டி அந்த வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த வீடு கட்டியதில் இருந்து செல்வமணியிடம் அவரது மாமனார் ராஜேந்திரன் சென்று, என்னுடைய இடத்தில் ஏன் வீடு கட்டினாய்? எனக்கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் ராஜேந்திரன், தனது உறவினரான ஏழுமலை (40) என்பவருடன் செல்வமணி வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரிடம், என்னுடைய இடத்தில் ஏன் வீடு கட்டி வசிக்கிறாய் என்றும், வீட்டை விட்டு வெளியே செல்லும்படியும் கூறியுள்ளார். இதனால் செல்வமணிக்கும், ராஜேந்திரனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த ராஜேந்திரன், ஏழுமலை ஆகியோர் சேர்ந்து செல்வமணியின் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் ரத்தம் சொட்ட, சொட்ட செல்வமணி அதே இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே ராஜேந்திரனும், ஏழுமலையும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செல்வமணியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே செல்வமணி இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து செல்வமணியின் மனைவி ராஜலட்சுமி, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் வெளியூருக்கு தப்பிச்செல்ல இருந்த சேட்டு என்கிற ராஜேந்திரன், ஏழுமலை ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் இரவே போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வீடு கட்டிய தகராறில் மருமகனை மாமனாரே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story