கடலூர் மாவட்டத்தில், கொரோனாவுக்கு முதியவர் பலி - டி.எஸ்.பி. மனைவி உள்பட 91 பேருக்கு பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார். மேலும் டி.எஸ்.பி. மனைவி உள்பட 91 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2,067 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 21 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
ராமநத்தம் அருகே உள்ள பெரங்கியம் பகுதியை சேர்ந்தவர் 62 வயது முதியவர். டயாலிசிசால் பாதிக்கப்பட்ட இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று முன்தினம் காலை அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அவர் அன்று மாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். இந்த நிலையில் நேற்று முதியவரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு வந்தது.
இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள், அவரை ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனர். இதற்கிடையே மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில் மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில் மங்களூரை சேர்ந்த செவிலியர் ஒருவர், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர், கடலூரை சேர்ந்த போலீஸ்காரர், அண்ணாகிராமம், பண்ருட்டியை சேர்ந்த அரசு ஊழியர்கள் 3 பேர், அண்ணாகிராமத்தை சேர்ந்த சிறை கைதி, பரங்கிப்பேட்டை, பண்ருட்டியை சேர்ந்த 2 கர்ப்பிணிகள், வெளிநாடு மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்த 5 பேர், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 54 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
இதுதவிர பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டின் மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,158 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2047 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
Related Tags :
Next Story