கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2020 10:15 AM IST (Updated: 25 July 2020 11:05 AM IST)
t-max-icont-min-icon

கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குள்ளனம்பட்டி,

திண்டுக்கல்-நத்தம் சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு, கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர். சிறுமலை பிரிவு அருகே கருப்பசாமி, விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி அதை இடிக்க நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திருக்குமரன், உதவி பொறியாளர் வினோத் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

இதை அறிந்த இந்து முன்னணியினர் மதுரை கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ், மாவட்ட செயலாளர் சஞ்சீவ்ராஜ் ஆகியோர் தலைமையில் அங்கு திரண்டு வந்து கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கோவில் முன் அமர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் கண்ணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து இந்து முன்னணியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அப்போது இன்று (சனிக்கிழமை) இது சம்பந்தமாக கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என அதிகாரிகள் கூறினர். இதைத்தொடர்ந்து இந்து முன்னணியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டம் காரணமாக கோவிலை இடிக்காமல் மற்ற பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Next Story