திருப்பூரில் 131 மில்லி மீட்டர் பதிவானது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் திருப்பூரில் அதிகபட்சமாக 131 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் நேற்று முன்தினம் மாலை மழை கொட்டித்தீர்த்தது. இதுபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. திருப்பூர் ராயபுரம் சமாதானபுரத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு தாசில்தார் பாபு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்று தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தண்ணீர் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது.
மழை காரணமாக தொட்டிப்பாளையம் கிராமத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. யாரும் குடியிருக்காத பழைய வீடு ஆகும். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அந்த வீட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். இதுபோல் மாநகரின் பல பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அவற்றை ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். மழை காரணமாக நொய்யல் ஆற்றில் அதிகளவு மழைநீர் செல்வதால் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்று காலை 7 மணி வரை பதிவான மழை அளவின் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு பகுதியில் 131 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 4 மில்லி மீட்டரும், ஊத்துக்குளியில் 15.30 மில்லி மீட்டரும், காங்கேயத்தில் 5 மில்லி மீட்டரும், தாராபுரத்தில் 24 மில்லி மீட்டரும், மூலனூரில் 92 மில்லி மீட்டரும், குண்டடத்தில் 15 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணைப்பகுதியில் 28 மில்லி மீட்டரும், அமராவதி அணைப்பகுதியில் 4 மில்லி மீட்டரும், உடுமலையில் 17.60 மில்லி மீட்டரும், மடத்துக்குளத்தில் 10 மில்லிமீட்டரும், திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதியில் 65 மில்லிமீட்டரும், வெள்ளகோவிலில் 13.20 மில்லி மீட்டரும், திருப்பூர் தெற்கு பகுதியில் 15 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
Related Tags :
Next Story