குமரி மாவட்டத்தில், அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - 12 இடங்களில் நடந்தது


குமரி மாவட்டத்தில், அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - 12 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 25 July 2020 12:15 PM IST (Updated: 25 July 2020 12:07 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தொழில்நுட்ப பணியாளர்களும், அலுவலக பணியாளர்களும் பணிக்கு வரவேண்டுமென நிர்ப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். சம்பளம் வழங்கும்போது எவ்வித பிடித்தம் இன்றி அனைவருக்கும் முழு ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக குமரி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல பொதுமேலாளர் அலுவலகம் முன்பும், பணிமனைகள் முன்பும் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை தலைமை தாங்கினார்.

சி.ஐ.டி.யு. சார்பில் ஸ்டீபன் ஜெயக்குமார், தொ.மு.ச. சார்பில் பால்ராஜ், கனகராஜ், எச்.எம்.எஸ். தலைவர் முத்துக்கருப்பன், லெட்சுமணன், டி.டி.எஸ்.எப். நிர்வாகி சந்தானம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு தீர்வுகாணாத பட்சத்தில் குமரி மாவட்டத்திலும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தொ.மு.ச. பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை கூறினார்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் பணிமனைகள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story