குமரியில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி - 155 பேருக்கு புதிதாக தொற்று
குமரியில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாயினர். மேலும் 155 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதேபோல் பலி எண்ணிக்கையும் கூடுகிறது. குறிப்பாக காய்கறி சந்தைகள், கடைவீதிகள், நகைக்கடைகள், வங்கிகள், தொழிலாளர் மருத்துவமனை, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் போன்றவற்றில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் போன்றோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, இந்த அலுவலகங்கள், கடைகள் பூட்டப்பட்டன.
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி கொரோனா பரிசோதனை மையம் மற்றும் தனியார் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் 208 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்த எண்ணிக்கை குமரி மாவட்டத்தின் புதிய உச்சமாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 294 ஆக உயர்ந்து இருந்தது.
அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக இருந்தது. நேற்று மேலும் 5 பேர் இறந்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
கப்பியறை பகுதியைச் சேர்ந்த 72 வயது ஆண், நாகர்கோவில் 48 வயது ஆண், திருவட்டார் பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண், குழித்துறை பகுதியைச் சேர்ந்த 63 வயது ஆண், நெல்லை மாவட்டம் கூட்டப்புளி பகுதியைச் சேர்ந்த பெண் 61 வயது பெண் ஆகிய 5 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களுக்கு மேலும் சில நோய்களின் பாதிப்பும் இருந்து வந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் ஒருவர் பின் ஒருவராக இந்த 5 பேரும் சிகிச்சை பலன் இன்றி பலியானார்கள். இவர்களில் சீரான உடல்நிலையுடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று காலையில் ஆஸ்பத்திரியில் நடைபயிற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மத்தியிலும், ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் குமரி மவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 5 பேர் கொரோனாவுக்கு இறந்திருப்பது மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
நேற்று முன்தினம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் ஒருவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் பணியாற்றி வந்தார். அந்த நகைக்கடைக்கு நேற்று கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது. மேலும் கடையில் பணியாற்றிய 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. தொற்று கண்டறியப்பட்ட நகைக்கடை ஊழியரின் வீட்டிலும் கிருமி நாசினி தெளித்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உளவுத்துறையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்றும் ஏராளமானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளானார்கள். ஒரே நாளில் 155 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஆண்கள் 82 பேரும், பெண்கள் 68 பேரும், சிறுவர்கள் 5 பேரும் அடங்குவர். இதில் நாகர்கோவில் நகரில் மட்டும் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3449 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story