சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் இறந்ததாக வழக்கு: மகேந்திரனின் உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வாக்குமூலத்தை பதிவு செய்தனர்


சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் இறந்ததாக வழக்கு: மகேந்திரனின் உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வாக்குமூலத்தை பதிவு செய்தனர்
x
தினத்தந்தி 25 July 2020 11:15 PM GMT (Updated: 25 July 2020 5:58 PM GMT)

சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் வாலிபர் மகேந்திரன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் கடந்த மே மாதம் 18-ந்தேதி ஜெயக்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் துரை உள்ளிட்டவர்களை தேடி வந்தனர்.

இதுதொடர்பாக துரையின் தம்பி மகேந்திரனை (வயது 27) கடந்த மே மாதம் 23-ந்தேதி இரவில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பாப்பான்குளத்தில் உள்ள அவரது பாட்டியின் வீட்டில் வைத்து, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணையின்போது மகேந்திரனை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை 2 நாட்கள் கழித்து போலீசார் விடுவித்தனர்.

இந்த நிலையில் மகேந்திரனின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரை கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஜூன் மாதம் 13-ந்தேதி மகேந்திரன் உயிரிழந்தார்.

இதையடுத்து மகேந்திரனின் தாயார் வடிவு, போலீசார் தாக்கியதில்தான் தனது மகன் மகேந்திரன் உயிரிழந்ததாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து தூத்துக்குடி கே.வி.கே. நகரில் உள்ள மகேந்திரனின் அக்காள் சந்தனமாரியின் வீட்டுக்கு சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், இன்ஸ்பெக்டர் சபிதா தலைமையிலான போலீசார் நேற்று பேய்க்குளத்துக்கு சென்றனர். அங்குள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் இருந்து விசாரணை மேற்கொண்டனர்.

அங்கு மகேந்திரனின் அண்ணன் துரை மற்றும் உறவினர்களான இசக்கியம்மாள், பெருமாள், பார்வதி, கனகவதி, சரசுவதி ஆகியோரை வரவழைத்து, அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

இதையடுத்து அவர்கள், உயிரிழந்த மகேந்திரனை போலீசார் பிடித்துச்சென்ற பாப்பான்குளத்துக்கு விரைவில் சென்று விசாரணை நடத்த இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தாயார் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், பேய்க்குளத்தில் உள்ள மகேந்திரனின் தாயார் வடிவு வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு சுழற்சி முறையில் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி கே.வி.கே. நகரில் உள்ள மகேந்திரனின் அக்காள் சந்தனமாரியின் வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் அளிப்பதற்காக வடிவு, சந்தனமாரி ஆகியோர் பேய்க்குளத்துக்கு வந்தனர். அவர்களிடம் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் தூத்துக்குடியில் வாக்குமூலம் பெற்றதால், விசாரணை நடத்தாமல் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உறவினர்களிடம் விசாரணை நடைபெற்றது.

Next Story