பஸ்கள் இயக்கப்படாததால் வாகனம் நிறுத்தும் இடமாக மாறிய வேலூர் பழைய பஸ் நிலையம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


பஸ்கள் இயக்கப்படாததால் வாகனம் நிறுத்தும் இடமாக மாறிய வேலூர் பழைய பஸ் நிலையம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 26 July 2020 3:00 AM IST (Updated: 26 July 2020 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால் வாகன நிறுத்தும் இடமாக வேலூர் பழைய பஸ் நிலையம் மாறி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. வேலூர் புதிய பஸ்நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்காரணமாக பழைய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி, கணியம்பாடி, அடுக்கம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்களும் இங்கிருந்து தான் புறப்பட்டு சென்றன. தற்போது பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் இன்றி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

வேலூர் நகரில் வசிக்கும் மக்கள் வேலை, மருத்துவமனைக்காக அடுக்கம்பாறை, பாகாயம் உள்ளிட்ட இடங்களுக்கு ஆட்டோவில் பயணம் செய்கிறார்கள். அதனால் பழைய பஸ் நிலையம் திருவள்ளூர் சிலை அருகே ஆரணி சாலை வழியாக பாகாயம், அடுக்கம்பாறைக்கு செல்ல ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்கும். இந்த ஆட்டோக்கள், மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பஸ் நிலையத்தின் உள்ளே வரக்கூடாது என்றும், அதையும் மீறி வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் பஸ் நிலையத்தின் நுழைவு பகுதியில் கடந்த மாதம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

ஆனால் தற்போது பஸ் நிலையத்தின் உள்ளே இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் நிறுத்தப்படுகின்றன. சில வாகன ஓட்டிகள் பழைய பஸ் நிலையத்தை வாடகை கொடுக்காத வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகிறார்கள். காலையில் நிறுத்தப்படும் ஆட்டோ, கார்கள் இரவு நேரத்தில் தான் மீண்டும் அங்கிருந்து எடுத்து செல்கின்றனர்.

இதன்காரணமாக கடைகளுக்கு பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களை கடையின் முன்பு நிறுத்தி இறக்க முடியாத நிலை காணப்படுகிறது என்று அப்பகுதி கடை வியாபாரிகள் தெரிவித்தனர். பழைய பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் உள்ளிட்டவற்றை நிறுத்த தடை விதிக்க வேண்டும்.

அதையும் மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை என்று பொதுமக்கள், அப்பகுதி கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story