பழனி அருகே, காயங்களுடன் பிணமாக கிடந்த மாணவன் - சாவில் சந்தேகம் என உறவினர்கள் சாலை மறியல்
பழனி அருகே பள்ளி மாணவன் காயங்களுடன் பிணமாக கிடந்தான். அவனது சாவில் சந்தேகம் உள்ளது என உறவினர்கள் சாலைமறியல் செய்தனர்.
நெய்காரப்பட்டி,
பழனி அருகே உள்ள சின்னக்கலையம்புத்தூரை சேர்ந்தவர் சேதுபதி. இவரது மகன் மோகன் (வயது 13). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் மதியம் விளையாட சென்று விட்டு இரவு 7 மணி அளவில் வீடு திரும்புவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் இரவு 8 மணி வரை ஆகியும் மோகன் வீடு திரும்ப வில்லை. இதனால் பெற்றோர் சந்தேகமடைந்து, பழனி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மோகனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று சின்னக்கலையம்புத்தூர் பகுதியில் உடலில் காயங்களுடன் மோகன் இறந்து கிடந்தான். இதையடுத்து அவனது உடலை தாலுகா போலீசார் கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவனது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா, தாசில்தார் பழனிசாமி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் சையது பாபு ஆகியோர் விரைந்து வந்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் நேற்று இரவு வரை மாணவனின் உடலை மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் வாங்க வில்லை. மாணவன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளான் என்றும், அதற்கு காரணமானவர்களை கைது செய்த பிறகே உடலை வாங்குவோம் என்றும் உறவினர்கள் கூறினார்கள். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
Related Tags :
Next Story